உலக வரலாற்றில் முதன்முதலாக முத்துக்குளியல் நடைபெற்றது தமிழ்நாட்டில் தான். கடல் வணிகத்தில் ஈடுபட்ட அனைத்து நாடுகளுக்கும் இங்கிருந்து முத்து ஏற்றுமதியாகியிருக்கிறது. நமது ஆனி முத்துக்கு சர்வதேச சந்தையில் அமோக மதிப்பு.
சிப்பி பிளந்தாற்போல் நீதி சொன்ன சாலமோனுக்கு முத்து பதித்த பொன்னகை ஒபீர்( உவரி) துறைமுகத்திலிருந்து போயிருக்கிறது. கிளியோபட்ராவின் சங்கு கழுத்தை கொற்கை முத்து அலங்கரித்திருக்கிறது. எலிசபெத் மகராணியின் மணிமகுடத்திலும் லண்டன் அருங்காட்சியகத்திலும் தூத்துக்குடி முத்து இடம் பெற்று இருக்கிறது.
மண்டபம் முதல் மணப்பாடு வரையான பண்டைய தென்பாண்டி மண்டலத்தில் முந்நூறுக்கு மேற்பட்ட கடற்பாறைகளில் முத்து சிப்பிகள் விளைந்தன. கிரேக்கரும் அரேபியரும் ஈழத்து கடலாடிகளும் பாண்டிய கடற் பகுதிகளில் முத்து குளித்துள்ளனர்.
கி.மு 4ம் நுற்றாண்டில் உலகம் சுற்றிய கடற்பயணி பிளினி கொற்கை கடலில் மரண தண்டனை பெற்ற கைதிகளை முத்து குளிக்கும் தொழிலில் பயன்படுத்தியதாக எழுதியுள்ளார்.
தூத்துக்குடி பகுதியில் மீன்பிடி தொழிலைப்போல முத்துக்குளித்தலும் முழு நேர தொழிலாக விளங்கியிருக்கிறது. நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படாத அந்தக் காலத்தில் முத்து குளிப்பது எளிதான காரியம் இல்லை. பாய்மரப்படகுகளில் பல கடல் மைல் தூரத்தில் உள்ள சிப்பிப்பாறைகளுக்கு செல்லவேண்டும். துறைமுகத்துக்கு நேர் திசையில் சிலுவை பார், பெரிய பார், வைப்பாருக்கு நேர் அழுகல் பார், திருச்செந்தூருக்கு நேர் கருவல் பார், புன்னக்காயலுக்கு நேர் குடமுத்திப்பார், மஞ்சள் காயலுக்கு நேர் பூந்தோட்டப்பார் என்று தூத்துக்குடியை சுற்றி நூற்றுக்கு அதிகமான சிப்பிப்பாறைகள் இருந்தன. காற்று பலத்து வீசும் பருவ காலங்களில் பாறைகளை சென்றடைய முடியாமல் பாதியிலே திரும்பி வரவும் நேரிடும்.
பதினைந்து பேர் பயணம் செய்யும் படகில் முத்து குளிப்பதற்கென்று பத்து குளியாள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவ ஐந்து தோடைகள் கூடவே பயணம் செய்வார்கள். பத்து கிலோ எடையுள்ள கல் அல்லது இரும்பு வளையத்துடன் பினைக்கப்பட்ட கயிற்றை பிடித்துக் கொண்டு குளியாட்கள் கடலுக்குள் குதிப்பார்கள். தரை தட்டியதும் தோடை கயிற்றை இழுத்து விடுவார். முத்து குளிப்பவர் மூழ்கி எழும் வரை தோடையின் கண்கள் அவர் மீதே இருக்கும். முத்து குளிப்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு திக்கு முக்காடினால் தோடை மேலே தூக்கி விடுவார். முத்து குளிப்பவர்கள் பல நிமிடங்கள் மூச்சை அடக்கும் திறனுடையவராக இருக்க வேண்டும். உள் நீச்சலிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தூத்துக்குடியில் நடந்த முத்து சிலாபங்களில் பங்கேற்றவர்களில் ஒரு சிலரே இன்னும் உயிரோடு இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான தரைக்குடியான் 6 ஆண்டுகள் முத்து குளித்தவர். அவரது அனுபவங்களை பிரமிப்புடன் விவரித்தார்.
நான் முத்துக்குளிக்கும் போது வயது 25. ஒரு வருடம் தோடையாக இருந்தேன். அதன் பின் தான் குளியாள் ஆனேன். மலையை வைத்தும் மதியை வைத்தும் தான் நாங்கள் கடற்பயணம் போவோம். சில நாட்களில் வெள்ளியை கணக்கு வைத்து அதிகாலையில் புறப்படுவோம்.
அப்போது எல்லாம் பாய்மரப் படகு தான். காற்றுக் காலங்களில் அரசாங்கத்துக்கு சொந்தமான வலம்புரி, ஜமீலியா லாஞ்சுகளில் படகுகளை கட்டி சிப்பி பார்களுக்கு இழுத்துச் செல்வார்கள். சிப்பிகள் சேகரிக்கும் பையை காலில் கட்டிக் கொண்டு கடலில் இறங்குவோம். பின்னர் அதை கழுத்தில் மாட்டிக்கொண்டு சிப்பிகளை பறித்துப் போடுவோம். ஒவ்வொரு முங்குக்கும் 50, 60 சிப்பிகள் வரை பறிப்போம். எல்லா சிப்பிகளிலும் முத்துக்கள் கிடைக்காது. கடுகு சைசில் இருக்கும் பொடி முத்திலிருந்து இலந்தக்காய் சைசில் இருக்கும் பரு முத்து வரை எப்போதாவது கிடைக்கும்.
முத்துக்குளிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டால் தோடைகள் உச்சி முடியைப்பிடித்து மேலே இழுப்பார்கள். வெளியே வந்ததும் முதுகில் பலமாக நாலைந்து அடி போட்டால் தான் மூச்சு சீராகும். மிக அதிகமாக மூச்சு முட்டுக்கு ஆளானவர்களை கோணிப்பாயில் வைத்து சுருட்டி படகில் போட்டு உருட்டுவார்கள்.
ரொம்பவும் ஆபத்து என்றால் படகில் உள்ள கொடியை ஏற்றுவோம். கவர்மெண்ட் லாஞ்சுகளில் வந்து காப்பாற்றுவார்கள். நான் முத்துக் குளித்த ஆறு ஆண்டு காலத்தில் பத்து பேர் வரை மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். ஒரு நாள் ஒரே படகில் வந்த ஆறு பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
பொதுவாக சங்குகள் கண்ணை ஏமாற்றும். பக்கத்தில் இருப்பது போல தெரியும். எட்டிப் பறித்து விடலாம் என நினைத்தால் தூரம் போய்க் கொண்டே இருக்கும். அப்படியே சங்கை பிடித்தாற் போல் மூச்சடங்கிப் போய் உட்காந்து விடுவோரும் உண்டு. மூச்சுத் திணறல் ஏற்படும் போது வேகமாக எம்பினால் எப்படியும் மேலே கொண்டு வந்து சேர்த்து விடும். செயல் இழந்து நின்று விட்டால் தலை குப்புற கொண்டு போய் தரையில் அடித்து முதுகு எலும்பு முறிந்து விடும்.
சங்கு குளிக்கும் போது பளிச் சென்று தெரியும் கைகால் நகங்களைப்பார்த்து பால்சுறா வந்து விடும். எக்கு தப்பாக மாட்டிக்கொண்டால் தொடைக் கறியை குதறி விடும். பால்சுறா வந்தால் மண்ணை கலக்கி விடுவோம். அது கண்தெரியாமல் திசை மாறிப் போகும்.
ஆடா திருக்கையாலும் ஆபத்து உண்டு. அதன் வாலில் அரை அடி நீள முள் இருக்கும். வாலை சுழற்றி ஓங்கி அடித்தால் அப்படியே பொத்துவிடும். மூரைகளுக்கோ முள்ளம்பன்றி மாதிரி உடம்பெல்லாம் முள். முத்துக்குளியாள் கையில் சிலாங்கையாக கொருத்து விடும். கரையேறும் வரை கடுமையாக கடுக்கும்.
இவ்வளவு கஷ்டப்பட்டு முக்குளித்தாலும் எங்களுக்கு கால் வயித்துக்கூலி தான்.
பறிக்கும் சிப்பிகளில் மூன்றில் இரண்டு பங்கு அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும். மீதி ஒரு பங்கும் கணிசமாக இருந்தால் தான் படகுகாரர்கள் ஓரளவு கூலி தருவார்கள்.
அரசாங்கத்துக்கு பெரும் பங்கு போவதால் சில முத்து சிப்பிகளை படகில் வைத்து வெட்டி முத்துக்களை வாய்க்குள் போட்டுக்கொண்டும் அம்மார் கயிற்றுக்குள் பதுக்கி வைத்துக் கொண்டும் வருவோம். அரசாங்க அதிகாரிகள் போடும் சோதனைகளில் முத்துக்கள் சிக்கி கொண்டால் அவ்வளவுதான். ஆனாலும் கஷ்டப்பட்டு வெளியே கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்றுவிடுவோம். அதிலும் அற்பத்தொகையைத்தான் படகுக்காரர்கள் எங்களுக்கு தருவார்கள்' என்றார்.
தரைக்குடியானுக்கு 10 வயது மூத்தவர் வெட்டும்பெருமாள். உசுரோடு இருக்கும் முத்துக்குளியாட்களில் மூத்த மனுஷர். முத்துக்குளிப்பு மும்முரமாக நடந்த கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். 'அப்பல்லாம் 2000 வள்ளம் முக்குளிக்க அணிவகுத்துப் போகும். சாயல்குடி பக்கம் தேன் எடுத்து பொழைச்சிக்கிட்டிருந்த எங்க முன்னோர்கள் முத்துக்குளிக்கிறதுக்காக தூத்துக்குடிக்கு குடி பெயர்ந்தாங்க. எங்களைப்போல ஏராளமான ஆளுங்க நாகப்பட்டணம், மலையாளம் பக்கமிருந்துல்லாம் குடியேறுனாங்க... சிலாபம் நடக்கும்போது தெனமும் ஆயிரக்கணக்கான முத்துச்சிப்பி மூட்டைகள் இறங்கும். அதை சுமக்க பெரிய பொம்புளைக கூட்டம் நிக்கும்'என்றார்.
ஆதி காலந்தொட்டு முத்துசிலாபம் நடைபெற்ற தூத்துக்குடி துறைமுகம் இன்று மூச்சடங்கி கிடக்கிறது. வெளிநாட்டு வியாபாரிகளின் நடமாட்டத்தால் இரவுபகல் தெரியாமல் முழு நேரமும் விழித்திருந்த முத்துசிலாபத்துறை ஆள் நடமாட்டமின்றி தூங்கி வழிகிறது. முத்தெடுக்க மூழ்கிய மீனவர்களின் வாரிசுகள் சங்கு குளித்து சங்கடப்படுகிறார்கள்.
பல நூற்றாண்டு கால பழந்தொழில் அழிந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பரிதவிக்கும் அளவுக்கு கடல் வளம் வற்றிவிட்ட காரணம் என்ன?
கடலிடம் கேட்டால் என்ன சொல்லும்? முத்தெடுத்த பொற்கால சிந்தனையில் மூழ்கிக்கிடந்த முன்னாள் கடலாடிகளிடமே அதையும் கேட்டோம். அனைவரும் ஒட்டுமொத்தமாக கடலுக்குள் மீன் மேய்ந்துகொண்டிருந்த விசைப்படகுகளை கை காட்டினார்கள்.
ஓய்வு பெற்ற மீன் வளத்துறை உதவி இயக்குநர் அந்தோணி சாமி சற்று விளக்கமாகவே சொன்னார்.' வெள்ளக்காரங்க காலம் வரை எந்த பங்கமும் இல்ல. நவம்பர்ல இருந்து பெப்ருவரி வரை தங்கு தடையில்லாம குளியல் நடந்தது. முத்து சிலாபம் நடக்குற காலத்தை அரசு 'கெஸட்'ல வெளியிடுவாங்க....அதை பார்த்து இலங்கை, அரேபிய கடலாடிகள்லாம் வந்து முக்குளிச்சிட்டு போனாங்க.1955ல நார்வே விஞ்ஞானி இலுகாசன் வடிவமைச்ச நவீன படகுகளை 59ல அரசாங்கம் மீன்பிடித்தொழிலுக்கு கொண்டு வந்தது. அதுல இழுவலையை பயன்படுத்துறதால கடலடியில உள்ள சிப்பி சிதைந்தது. உண்மையில் அதுக்குப்பேரு இழுவலை இல்ல, தரை சுரண்டி.
இப்ப தெர்மல் பிளாண்ட் இருக்குற இடத்துல மாங்குரோவ் காடு மண்டிக்கிடந்தது. தொழிற்சாலைகளால தண்ணீர் மாசுபட்டுப்போச்சு. உப்பளக்கழிவு நீராலும் உயிரினங்கள் அழிய வாய்ப்பிருக்கு.'
அந்தோணிசாமியின் வார்த்தைகளை வழிமொழிந்தார் கடலோர குடியிருப்பு வளர்ச்சி சங்கத்தலைவர் பகத்சிங். இவர் முக்குளிக்கும் பாய்மரங்களை நடுக்கடலுக்கு இழுத்துப்போகும் வலம்புரி படகின் மேல்தள ஊழியராக பணிபுரிந்தவர்.
மன்னார் வளைகுடா கடலில் இருப்பது தூய நீர்(விர்ஜின் வாட்டர்). இறாலும் , முத்துசிப்பியும் நல்லா வளரும். தொழிற்சாலை பெருகியதால் பல்லுயிர் இனப்பெருக்கம் தடைபடுது. 1962 வரை முத்து குறைவில்லாம கெடைச்சுது. 62ல் கவர்னர் விஷ்ணுராம் சேத்தி துறைமுகப்பகுதிக்கு வந்தப்போ ஒருத்தர் திடீர்னு கடலில் முங்கி முத்துசிப்பி எடுத்து கொடுத்தாரு. வெட்டிப்பார்த்தப்போ நல்ல முத்து இருந்தது. அதை கவர்னருக்கு பரிசா கொடுத்தோம்.
விசைப்படகு பெருத்த பிறகு சிப்பிக்கு தட்டுப்பாடாகிப்போச்சி. பத்மநாபன் தலைமை செயலாளரா இருந்தப்போ முத்துக்குளியலை வளர்க்க முயற்சி எடுத்தார். ஆனா அதுக்கு வாய்ப்பில்லேன்னு அதிகாரிங்க அறிக்கை அனுப்பிட்டாங்க'என்றார்.
ஆயிரமாயிரமாண்டுகளாக தொடர்ந்த முத்துசிலாபம் 1961ல் முடிவுக்கு வந்தது. முத்துக்குளித்த தொழிலாளர்கள் சங்குகுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 1967ல் தி.மு.க. அரசு மீன்வளத்துறையில் 'சங்கும் முத்தும்' என்ற பிரிவை ஏற்படுத்தி அதற்கென்று ஒரு இணை இயக்குநரையும் நியமித்தது. அதன் மூலம் சங்கு குளித்தொழிலை காப்பாற்ற முடிந்ததே தவிர முத்துக்குளித்தொழிலுக்கு புத்துயிரளிக்க முடியவில்லை.
மூத்தின் கதை முடிந்துவிட்ட நிலையில் சங்குத்தொழிலும் சங்கு (கழுத்து) நெறிபட்ட நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்தனர் சங்கம் வைத்து சங்கு அறுக்கும் சாகுல் அமீதும் முனியசாமியும். தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் தாராளமாக கிடைக்கும் உயிரினங்களையும் சேர்த்து சங்கு குளிப்பவர்களை வனத்துறையினர் மிரட்டுகின்றனர். சங்கு குளிப்பதையே தடை செய்து முக்குளிக்கும் தொழிலையே முடக்கப்பார்க்கிறார்கள்' என்றனர்.
பசுமை புரட்சியால் விளைச்சலை பெருக்கினோம். வீரியமான விதைகளை இழந்தோம். நீலப்புரட்சியால் மீன்பிடி அதிகரித்தது. ஆனால் முத்துக்குளி அழிந்தது. முடிந்துபோன முத்து சிலாபத்தால் அரிய வரலாற்றுப் பெருமையை பறிகொடுத்தோம்.
இயற்கை முத்தை இழந்த சோகத்தை ஈடு கட்டுவது போல் வளர்ப்பு முத்தை உற்பத்தி செய்கிறது மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம். பளபளக்கும் செயற்கை முத்து உற்பத்தியிலும் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. என்ன இருந்தாலும் தெள்ளிய நீரோட்டத்தாலும், ஒள்ளிய கதிர் வீச்சாலும் நாலாபுற நாடுகளில் இருந்தும் வணிகர்களை கொண்டுவந்து நமது வரலாற்றுக்கு வளம் சேர்த்த தென்பாண்டி முத்துக்கு எதுவும் இணையாகாது என்றே தோன்றுகிறது.
வண்ணமுத்தும்... வளர்ப்புமுத்தும்
சிப்பிக்குள் விழுந்த மழைத்துளி முத்தாக விளையும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
ஆனால் மழைத்துளி முத்தாவதில்லை. சிப்பிகள் வாய் திறக்கும்போது மண்துகளோ, ஒட்டுண்ணியோ நுழைந்து விடுகின்றன. உள்ளே நுழைந்த பொருளின் உறுத்தல் தாளாமல் சிப்பியின் தோல் பையான மேன்டிலில் இருந்து சுரக்கும் திரவம் அந்த பொருளை சுற்றி பை போல மூடுகிறது. இதுவே ஒளி மிகுந்த முத்தாக உருவாகிறது.
இந்த பார்முலாவை பயன்படுத்தி சிப்பியின் இனவிருத்தி பகுதியில் மேன்டில் திசுவை செலுத்தி அதன் அருகே சிறு பாசியை வைத்து விடுகின்றனர். பாசியை சுற்றி மேன்டில் திரவம் சுரக்கிறது.முத்து வளர்கிறது.
Sunday, February 15, 2009
Sunday, December 28, 2008
மறைமுகமான துறைமுகம் கொற்கை
மடல் விரிந்த வாழைகள்& தாரைகள் நீந்தும் குளம்& மங்கையின் மார்பிலிருந்து நழுவிய சிற்றாடை போல் நெளியும் சிற்றோடை என மருதநிலத்தின் இலக்கணம் மாறாத அந்த சிற்றூர்தான் அலையடிக்கும் கடலும்& நீர்யானை போன்ற நாவாய்களும்& சங்கறுக்கும் ஒலியும்& முத்துக்கு விலை பேசும் சத்தச் சலனமும் மிக்க நெய்தல் நிலஞ்சார்ந்த பட்டினப்பாக்கமாக விளங்கியதென்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.
‘ இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்மதில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லென
கலிகெழு கொற்கை‘
என உயர்வு நவிற்சி இல்லாத சங்கப்பாடலே சான்று பகர்ந்தபின் அதை நம்பித்தான் ஆகவேண்டும்.
காலத்துக்கு ஆற்றல் அதிகம். அது மானுட வரலாற்றின் பக்கங்களை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் புரட்டிப் போட்டுவிடும்.
மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கை அம்பெருந்துறை‘ என அகநானூறு அடையாளம் காட்டும் பாண்டியர்களின் பழம்பதியான கொற்கை தான் இவ்வாறு உருமாறிக்கிடக்கிறது.
கி.மு. 4&ம் நூற்றாண்டு முதல் கி.பி. 4&ம் நூற்றாண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட நம்நாட்டுப்புலவர்களும், வெளிநாட்டு பயணிகளும் கொற்கையின் புகழைப் பாடியிருக்கிறார்கள்.
பொதுவாக தல வரலாற்றுக்கு
ஆதாரங்களையும், ஆவணங்களையும் ஆய்வறிஞர்கள் காட்டுவார்கள். நாம் சாமான்யர்கள். கண்கண்ட காட்சிகளையும், வாய் மலர்ந்த சாட்சிகளையும் பதிவு செய்யலாம் என்றெண்ணி தூத்துக்குடியிலிருந்து கொற்கை நோக்கி புறப்பட்டோம்.
செல்லும் வழியிலேயே கொற்கை சரித்திரத்துக்கு சான்று பகரும் பல இடங்களை காண முடிந்தது. மன்னர்கள் வேதியர்களுக்கு கோ தானம், பூதானம் செய்வதுண்டு. (அந்தணர்களுக்கு அதிகமாக ஊர் தானம் செய்த சோழ மன்னர்கள் ஊரும், வீடுமின்றி வாடியது சோகக் கதை). மன்னர்கள் தானமாக வழங்கும் ஊர்களுக்கு ‘மங்கலம் ’என்று பெயர்.
சேந்தமங்கலம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம், மங்கலக்குறிச்சி என்று பாண்டிய மன்னர்கள் தானம் வழங்கிய ஊர்களில் அண்மைக் காலம் வரை அந்தணர்கள் அரசோச்சியதை அகஸ்டின் ஆசிரியர் நினைவு கூர்ந்தார். இதில் சேந்தன், மாறன் என்பதெல்லாம் பாண்டியனின் பட்டப்பெயர்கள்.
ஆறுமுகமங்கலம் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால் (ஆறு&முக &மங்கலம்) என பெயர் பெற்றது.
திருவழுதிநாடார்விளை, கோவன்காடு என்றெல்லாம் பாண்டியன் பெயரைச் சொல்லும் ஊர்கள் கொற்கையை சுற்றி உண்டு.
ஜம்மு& காஷ்மீர் போல
அக்காலத்தில் அனைத்து ராஜ்யங்களுக்கும் இரு தலைநகரங்கள் இருந்தன. சேரருக்கு வஞ்சி, முசிறி, சோழருக்கு உறையூர், பூம்புகார், பாண்டியர்களுக்கு கொற்கை, மதுரை. பெரும்பாலும் ஒரு நகரம் நிதி ஆதாரத்துக்கும், மற்றொரு நகரம் நிர்வாகத்துக்கும் வசதியாக இருந்தது.
கணிசமான கடல் வருமானம் இருந்ததால் பாண்டிய இளவரசர்கள் கொற்கையில் தங்கியிருந்து நிதி நிர்வாகம் செய்திருக்கின்றனர்.
மற்ற மன்னர்களைப் போலன்றி பாண்டியர்களுக்கென்று ஒரு மாறுபட்ட குணம் உண்டு. இவர்கள் முன்னோர்கள் குன்றுபோல் சேர்த்த சொத்தை குந்தியிருந்து சாப்பிட்டு அழிக்கமாட்டார்கள். புதிது ,புதிதாக வருவாயை பெருக்குவார்கள் என அரபி பயணி இதான் பதூதா தன் பயணக்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். கொற்கைக்குமிக அண்மையில் அக்காசாலை என்று அழைக்கப்படுகிற அக்கசாலை இருக்கிறது. இது பாண்டியர்களின் ரிசர்வ் வங்கி. (அக்கம்= பாண்டவர்கள் வெளியிட்ட நாணயம். அதை அச்சடிக்கும் (தொழிற்)சாலை அக்கசாலை).இந்தப்பகுதியில் ‘ ஏர வெற்றிவேல்செழியன் ’என்று வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட செப்புக்காசுகள் கிடைத்துள்ளன.
இந்த அக்கசாலை கொல்லர்களின் வம்சாவளியினர் இன்றளவும் ஏரலில் வசிக்கின்றனர். கண்ணகியின் காற்சிலம்பை திருடி மன்னனின் கோபத்துக்கு முன்னோர்கள் ஆளாகிவிட்டதால் அஞ்சி இடம்பெயர்ந்துவிட்டதாக இவர்கள் கூறுகிறார்கள்.
உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது.
காலங்காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்க முடியாத சான்றுகள்.
அந்த வகையில் கொற்கையில் சின்னஞ்சிறுவர்களும் ஒரு கர்ணபரம்பரை கதை சொல்கிறார்கள். அதை பரவைக்கரசு (இது ‘கடலரசன்‘ எனும் பொருள் படும் பரம்பரை பெயர்),
மாரிமுத்து ஆகியோர் கூறக்கேட்டோம்.
கொற்கை குளம் நடுவே கோவிலொன்று உள்ளது. அதில் உறையும் தெய்வத்தை வெற்றிச் செல்வியம்மன் என்றும், வெற்றிச் செழியஅம்மன் என்றும் இருவிதமாக அழைக்கிறார்கள். கி.பி. 2&ம் நூற்றாண்டளவில் வடிவமைத்த சிலை இங்கு இருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் தான் சிலப்பதிகாரம் அரங்கேறியிருந்தது. அதில் கூறப்படும் வெற்றிச்செழியன் எனும் பாண்டியனின் பெயரால் அக்கோயில் வழங்கியிருக்கலாம்.
ஆள்பவர்கள் பெயரில் ஆண்டவரை அழைப்பது அக்கால மரபு.
சுவாமிக்கு மன்னர் பெயர் வைப்பதோடு மன்னர் பெயராலேயே அர்ச்சனையும் செய்வர். இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் போசள மன்னர் மகளை முறப்பநாட்டில் திருமணம் செய்தார். முறப்பநாட்டில் எழுந்தருளியுள்ள சிவனை ‘திருக்கைலாய வீரநரசிம்ம போசளேஸ்வரா...’ என்று மாறவர்மசுந்தரபாண்டியனின் மாமனார் பெயரிலேயே இன்றளவும் வாழ்த்துவதாக பேராசிரியர் ராமசுப்பிரமணியன் கூறுகிறார்.
கொற்கை குளத்துக்கோவிலுக்குள் நுழைவோம். முற்காலத்தில் கண்ணகி சிலையே இக்கோவில் கருவறையில் இருந்ததாக கூறுகிறார்கள். கண்ணகி புகழ் பரவத்தொடங்கிய காலகட்டத்தில், தன் முன்னோர் இழைத்த அநீதிக்காக பொங்கிய கண்ணகியின் கோபத்தை தணிக்க பாண்டியன் இந்த ஆலயத்தை அமைத்துள்ளான்.
கி.பி. முதல் நூற்றாண்டின் முடிவுக் காலத்தில்தான் கண்ணகிக்கு நீதி பிழைத்த நெடுஞ்செழியன் வாழ்ந்தான். அவனது வழித்தோன்றலான வெற்றிச்செழியன், திருட்டுப்பழியை கண்ணகி மேல்சுமத்தி தன் குலக்கொம்பை தலை கவிழச்செய்த கொல்லர்களின் தலைவிழச்செய்ய வேண்டுமென்று வன்மம் கொண்டான்.
எனவே, கற்புத் தெய்வத்தின் ஆத்திரம் ஆற, அக்கசாலையில் வாழ்ந்த ஆயிரம் கொல்லர்களை அவள் கோவில் முன்பு கழுவேற்றினான். நரபலி கொடுத்த பின் வெறுமனே விட்டுவிடக்கூடாது என்பதற்காக பின்னாட்களில் எருமைகள் ஆயிரம் பலியிட்டதாக கூறுகிறார்கள். இங்கு எழுந்தருளியுள்ள வெற்றிச்செழிய அம்மன் சிலையின் தலை சற்று சாய்ந்துள்ளது.
எருமைப்பலியை அம்மன் ஏற்காததால் அவள் தலை திரும்பி இருப்பதாகவும் ஐதீகம் நிலவுகிறது.
ஊர் மந்தையில் வன்னிமரம் ஒன்று வயோதிபத்தால் தரை சாய்ந்து கிடக்கிறது. அதன் வயதை 2000 ஆண்டுகள் என்று தொல்லியல் துறையினர் கணிக்கின்றனர். மரத்தின் அருகே வீரன் ஒருவனின் நடுகல்லும் சற்றுத்தள்ளி சமண முனிவர் சிலையும் கிடைத்திருக்கிறது. சுரங்கப்பாதை ஒன்றும் தூர்ந்து கிடக்கிறது.
கட்டுரையின் தொடக்கத்தில் சிற்றாறாக ஓடிய சிற்றோடையைப்பற்றி சொன்னோம் அல்லவா? ஊருக்கு வடமேற்கில் ஓடும் அந்த சிற்றோடையின் நடுவே ‘கன்னிமார் குட்டம்’ என்று அழைக்கப்படும் குறுநீர்த்தேக்கம் உள்ளது. பாண்டிய இளவரசிகள் இதில் குளித்ததாக பேசிக்கொள்கிறார்கள்.
ஊருக்குள் எங்கு தோண்டினாலும் சங்கும், சிப்பியும் கிடைக்கின்றன. பெரிய, பெரிய வெண்சங்குகளை வீடுகளிலும் தோட்டங்களிலும் வைத்து அலங்கரித்திருக்கிறார்கள்.
அறுக்கப்பட்ட சங்கும், சங்கு வளையல்களும் அகழ்வாராய்ச்சிக்குழுவினருக்கு மூட்டை மூட்டையாய் கிடைத்திருப்பதால் சங்கு ஆபரணம் தயாரிக்கும் தொழிற்சாலை அங்கு இருந்ததை அறிந்துள்ளனர்.
ஆற்றில் தோண்டத்தோண்ட மணல் வருவது போல அகரத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் தோண்டத்தோண்ட சிப்பிகள் கிடைத்துள்ளது. அதைக்கொண்டு 50க்கும் மேற்பட்ட தொழிலாளிகளுக்கு 5ஆண்டு வரை வேலை கிடைத்தது என்கிறார்கள்.
சங்கு குளிப்போர் அமரும் இருக்கைகளையும், கள் அருந்துவோர் உறையும் சிறிய ஊர்களையும் உடையது கொற்கை என்ற சங்க பாடலுக்கு ஆதாரத்தை சங்கொலித்து கூறுகின்றன இந்த சான்றுகள். சங்கும் கள்ளும் கொற்கை கடற்கரையில் சங்கமித்திருக்கின்றன.
குடிக்கச் சிறந்த கள்ளைப் பற்றி குறிக்கத்தகுந்த சேதி ஒன்றுண்டு. முத்தைக் கொடுத்து பரதவர்கள் முங்க (நிரம்ப) குடித்துள்ளதாகவும் இலக்கியத்தில் இருக்கிறது.
பாண்டிய கடலில் பழயர் குல மகளிர்
அவிர்கதிர்முத்தமொடு வலம்புரி சொரிந்து (ஒளிசிந்தும் முத்துக்களோடு வலம்புரி சங்கை சிதற்றி)
கடல் தெய்வத்தை வணங்கியதை பழம்பாடல் படம் பிடித்துக்காட்டும்.
பழயர் வாழ்ந்த காயல் தான் பழைய காயலாக மருவியிருக்கிறது.
கொற்கை கடற்கரையில் குதிரையில் ஒருவன் சென்றபோது முத்துக்கள் குதிரைக்குழம்பில் குத்திக் காயம் ஏற்பட்டதாக சொல்வார்கள்.
எருது இழுத்த உப்பு வண்டியோடு உமணப்பெண் ஒருத்தி செல்கிறாள். அவள் வளர்த்த மந்தியன்று முத்துப்பரல்கள் போட்ட கிலுகிலுப்பையை ஆட்டி உமணத்தியின் புதல்வர்களை உற்சாகப்படுத்தியதாம்.
முத்து வணிகம் கி.பி.1&ம், 2&ம் நூற்றாண்டுகளில் மும்முரமாக இருந்துள்ளது. முத்தோடு குரங்கும், மயில் தோகையும், வாசனை திரவியங்களும் கிரேக்க, ரோம் தேசங்களுக்கு கொற்கை துறைமுகத்திலிருந்து போயிருக்கிறது. ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்,கொற்கை பொருட்கள் மீது மக்களுக்கு ஏற்பட்ட மோகத்தால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் எனப்பயந்து இறக்குமதிக்கு தடை விதித்துள்ளான்.
ஆதித்தமிழர்களின் கட்டடத்துக்கு ஆதாரக் கல்லாக விளங்கிய பெரிய சைஸ் செங்கல்கள், ஓடுகள் கொற்கை குளத்துக்குள் கிடைத்திருக்கின்றன. முதுமக்கள் தாழியும் நிறைய கிடைத்திருப்பதால் இப்போதைய குளம் அப்போதைய இடுகாடு என்போரும் இருக்கிறார்கள்.
மண்ணால் செய்த வலிமையான உறைகிணறுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக உறைக்கிணறுகள் எளிதில் மண் தூருகின்ற நெய்தல், பாலைப் பகுதிகளில்தான் அமைக்கப்படும் என்பதால் கொற்கை துறைமுகப்பகுதி என்பது உறுதியாகிறது.
அகரம் அருகே துறைமுக சாஸ்தா கோவில் ஒன்று உள்ளது. அப்போதைய கொற்கை கோட்டத்துக்கு உட்பட்ட உமரிக்காட்டில் கோட்டை வாழ் ஐயன் கோவில் உள்ளது. ஆறுமுக மங்கலத்தில் பெரும்படை சாஸ்தா கோவில் உள்ளது.புன்னக்காயல் பக்கம் கோட்டைமூலக்காடு என்ற இடம் உள்ளது. இவை எல்லாமே பாண்டிய ராஜாங்க படை, பல பராக்கிரமங்களோடு தொடர்புடையது.
பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாமே பாண்டியர்களை கொற்கையோடு தொடர்பு படுத்தி பேசுகின்றன.‘மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை’ என்பது அகநானூறு.‘நற்றிறம் படரா கொற்கை வேந்தே’என்கிறாள் சிலப்பதிகார கண்ணகி.
நாயக்கர் காலத்தில் தென்காசியை ஆண்ட பராக்கிரமபாண்டியன் தான் கொற்கை வழித்தோன்றல் என்று கல்வெட்டில் பொறித்துள்ளான். பாண்டியருக்கான செங்கோல் பெருந்துறையில் உள்ளசெங்கோல் மடத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக மரபு வழி தகவல் வருகிறது.
மதுரையில் இருந்து ஆண்ட சங்க காலம் முதல் தென்காசியில் இருந்து ஆண்ட நாயக்கர் காலம் வரை பாண்டியர்கள் தங்களை கொற்கை பரம்பரையினராக காட்டிக்கொள்வதற்கு தகுந்த காரணம் இல்லாமலில்லை.
குமரித் தென் கடலில் கடல்கோளால் அழிந்த பண்டைய பாண்டிய நாட்டிலிருந்து மறுபிறவி எடுத்ததுபோல் மீண்ட பாண்டியர்கள் வடக்கு நோக்கி மறுவாழ்வு தேடி வந்தனர். கடலோடிகளான அவர்கள் கண்டறிந்து தங்கிய இடம் தான் கொற்கை. இனம் அழிந்த பெருந்துயரிலிருந்து நீங்கி வம்சவிருத்தி செய்து வருவாய் ஈட்டி அரசாட்சியை அடைந்த நிகழ்வுகள் கொற்கையில் இருந்தபோதே நடந்திருக்க வேண்டும். கடல் பின்வாங்கி கொற்கை தனது சிறப்பை இழந்தபின்பும் நன்றி மறவா நற்பண்பு காரணமாக எங்கு சென்றாலும் கொற்றம் அளித்த கொற்கையை நினைவு கூர்ந்துள்ளனர்.
செயற்கை கோள் எடுத்த தூத்துக்குடி படம் மூலம் ஒரு உண்மைதெரிந்துள்ளது. தற்போது ஏரலுக்கு தெற்கே ஓடும் தாமிரபரணி ஆறு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஓடியுள்ளது. அதன் முகத்துவாரத்தில் இருந்ததால்தான் ஆறுமுகமங்கலத்துக்கு அப்பெயர் வந்தது. கொற்கைக்கு 1 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்த கனவி சமுத்திரத்தில் தாமிரபரணி கடலில் கலந்திருக்கவேண்டும் என்பது நிபுணர்கள் கணிப்பு. ஏரலுக்கு வடக்கே நட்டாத்தியம்மன் கோவில் ஒன்று உள்ளது. நடு ஆற்றுக்குள் அமைந்த கோவிலே நட்டாத்தியம்மன் கோவில்.
‘ கொல் ’என்றால் முத்து. கொற்கை
முத்துக்குளித்துறைமுக நகரம்.‘ கபாடம் ’என்றாலும் முத்து என்று ஒரு பொருள் உண்டு. பாண்டியர்களின் பழமையான தலை நகரமான கபாடபுரம் பொருநை நதிக்கரையில் தான் அமைந்திருந்ததாக சொல்பவர்களும் உண்டு. ராமாயாணமும், மகாபாரதமும், கவுடில்யரின் அர்த்தசாஸ்திரமும் குறிப்பிடும் கபாட மாநகர் கொற்கை தானா? கடல்கொண்ட லெமூரியாவையும், பூம்புகாரையும் ஆராயத்தான் அரசு தயங்குகிறது என்றால் மண்கொண்ட கொற்கையை யாவது விரிவாக ஆய்வு செய்யவேண்டும்.

Sunday, December 14, 2008
பொதிகை மலை அதிசயங்கள்
வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென்கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இருந்து தென்றல் வீசுவதாக கூறுவதில்லை. பொதிகையில் இருந்து அது புறப்படுவதாகத்தான் பேச்சு.
‘சூரியனோடும், தமிழோடும் தோன்றிய மலை‘ என வில்லிபுத்தூரார் பாடியது தற்புகழ்ச்சியோ, உயர்வு நவிற்சியோ அல்ல. பூமி தோன்றிய போதே தோன்றிய போதே பொதிகையும் இருந்திருக்கலாம் என நிலவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். மலையில் வாழும் மனித குல முன்னோர்களான மந்திகளை பார்த்த உயிரியல் வல்லுநர்களும் இதை ஒத்துக்கொள்கின்றனர்.
உலகில் பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த 18 மலைத்தொடர்களில் அஸ்ஸாம் முதல் சிக்கிம் வரை உள்ள வடகிழக்கு மலைத்தொடரும், குஜராத் முதல் குமரி வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலையும் அடங்கும். ஆனால், ஆன்மீக சிறப்பும் மூலிகை செழிப்பும் பொதிகையின் புகழை பல அடி உயர்த்தியுள்ளன.
தமிழ் தோன்றிய இடமாக கருதப்படுவதால் பொதிகை தமிழ் கூறும் நல்லுலகின் தனிக்கவனம் பெறுகிறது. அருவிகள் ஆர்த்தெழும் திருக்குற்றாலம் அடங்கலாக பொதிகை மலைத்தொடர் அகன்று அமைந்திருக்கிறது. இத்தொடரின் முத்தாய்ப்பாக அகத்தியர் தங்கிய ஏக பொதிகை இலங்குகிறது. குற்றாலம் தேனருவிக்கு மேலே உள்ள பரதேசி புடவு தமிழ் தோன்றிய இடம் இது என்பதற்கு சான்றாக உள்ளது. இங்கு பொறிக்கப்பட்டுள்ள 15 எழுத்துக்களை இதுவரை யாராலும் படித்தறிய முடியவில்லை. அந்த எழுத்துக்கள் தமிழின் வட்டெழுத்து, தமிழிக்கு முந்தைய ஆதி எழுத்துக்களாக அறியப்பட்டுள்ளன.
பாபநாசம் மேலணையில் படகு சவாரியோடு தொடங்குகிறது பொதிகை பயணம்.
மேலணைக்கு மேலே தமிழரின் ஆதி ஐங்குடிகளில் ஒரு குடியினரான பாணர்களின் தாகம் தீர்த்த பாணதீர்த்தம் உள்ளது. இது சித்தர்கள் தியானம் செய்த இடமாக கருதப்படுகிறது. இதையடுத்த கல்யாணி தீர்த்தம் அருகே உள்ள பாறையில் விஷ்ணு, ஆஞ்சநேயர், அகத்தியர் உருவச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
பாணதீர்த்தத்துக்கு மேலே துலுக்க மொட்டை அமைந்துள்ளது. இங்குதான் இசுலாமியராக மாறி யாக்கோபு என பெயர்மாற்றம் பெற்ற சதுரகிரி சித்தர் ராமதேவர் தவம் செய்தார். இசுலாமியராக மதமாறியதால் இவர் மற்ற சித்தர்களால் ஒதுக்கப்பட்டதாக வரலாறு.
துலுக்கமொட்டையை அடுத்து காணிகள் வசிக்கும் இஞ்சிக்குழி உள்ளது. காணிகள் அகத்தியரால் தாங்கள் வடக்கிலிருந்து அழைத்து வரப்பட்டதாக கூறுகிறார்கள். குறவர், பளியர்கள் வரிசையில் தமிழக பழங்குடி மக்களாக குறிக்கப்பட்டாலும் மலையாளமே தங்களின் தாய்மொழி என்கின்றனர். பங்கிப்புல், ஆவோலை வேய்ந்த குடிசைகளில் வசிக்கும் இவர்களுக்கு கையில்லம், மூட்டில்லம் என குலப்பிரிவுகள் உள்ளன. இல்லம் பார்த்தே இல்லறம் நடத்துகின்றனர். இல்லம் மாறி காதலித்தால் காதலர்களை குனிய வைத்து முதுகில் கல் ஏற்றி தண்டிப்பார்கள். மணப்பெண்ணுக்கு தாவள்ளிக்கொடியில் தாலி அணிவிப்பது வழக்கம். ஆனால் கால வெள்ளத்தில் தங்கள் பழமையிலிருந்து மாறிவிட்டனர். காணிகளின் குலதெய்வம் தம்பிரமுத்தானின் கோயில் கண்ணாடி புல் பாறையருகே உள்ளது. தம்பிர முத்தானை கொக்கரை வாத்தியம் இசைத்து வழிபடுகிறார்கள்.
இஞ்சிக்குழிக்கு மேலே ஈத்தங்காடு நிறைந்த பூங்குளம் அமைந்துள்ளது. பொருநையாகிய தாமிரபரணி இங்கிருந்து தான் பாணதீர்த்தத்துக்கு வருகிறது. எழுத்தச்சன் மலையாளத்தை உருவாக்கியது போல் அகத்தியர் தமிழை இயற்றியதாக பலரும் தவறாக எழுதுகின்றனர். அவருக்கு முன்பே சிவனாலும் முருகனாலும் வளர்க்கப்பட்டதல்லவா தமிழ்? அகத்தியர் அவர்களிடம் இருந்து கற்றிருக்கலாம். அவரது அகத்தியத்திலேலே எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல், இலக்கியத்திலிருந்து இலக்கணம் இயற்றப்படுவதாக கூறியுள்ளார். அவர் எழுதியது இலக்கண நூல் என்பதால் அதற்கு முன்பே இலக்கியம் இருந்திருப்பது உறுதியாகிறது. அகத்தியர் தமிழ் கற்றது பற்றி இருவேறு புராணக்கதைகள் கூறப்படுகின்றன. சிவபெருமான் திருமணத்துக்கு தேவர், முனிவரெல்லாம் கூடியதால் இமயம் தாழ்ந்தது. தெற்கே செல்ல அகத்தியருக்கு இறைவன் ஆணையிட்டார். ‘அங்குள்ள மொழி தெரியாதே‘ என்று தயங்கியதால் இறைவன் அவருக்கு தமிழறிவித்தாராம். இது ஒரு கதை.
காசியில் வட மொழி வல்லுநர்களோடு மாறுபட்ட அகத்தியர் வேறு மொழி கேட்டு முருகனை வணங்க, தென்மூலையில் ஓரிடத்தை காட்டி ‘அதனை எடுக்க‘ என்றாராம். செவ்வேள் சுட்டிய இடத்தில் சுவடிகள் சில கிடந்தனவாம். அந்த இடமே பூங்குளம். இது வேறு கதை. இரு கதைகளும் தமிழை வளர்த்த அகத்தியனை ‘வேற்றாளாக‘ காட்டவே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வள்ளுவருக்கு பூணூல் அணிய முயன்ற வன்முறை கூட்டத்தின் இடைச்செறுகலே இவை.
பூங்குளத்தில் அபூர்வமான கருட மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்களின் எண்ணிக்கையை வைத்தே வறுமையையும் செழுமையையும் காணி மக்கள் கணிக்கின்றனர். அதிகம் பூத்தால் மழை பொழியும் என்றும், குறைவாக பூத்தால் வறட்சி ஏற்படும் என்றும் நம்பிக்கை. இங்கு ஈத்தங்காடு நிறைந்திருப்பதால் அதை விரும்பியுண்ணும் யானைகள் கூடுகின்றன. சின்னச்சின்ன குன்றுகளாக அவை அசைந்து வரும் ஒய்யாரம் காண்போருக்கு கண் கொள்ளாக் காட்சி. பூங்குளத்துக்கு அருகிலேயே நெய்யாற்றுக்கு தண்ணீர் வழங்கும் பேயாறு ஓடுகிறது. கரை தொட்டு நிறைந்து வரும் இதில் ஒரு புத்துணர்ச்சிக்குளியல் போடலாம்.
பூங்குளத்தை கடந்தால் சங்குமுத்திரையை அடையலாம். திருவாங்கூர் சமஸ்தான எல்லையான அங்குள்ள பாறையில் சங்கு சக்கர முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மேலேறினால் ஏக பொதிகையை அடையலாம். சங்கு முத்திரையை அடையாளமாக கொண்டு பார்க்கும் போது ஏக பொதிகை தமிழக எல்லைக்குள் தென்பட்டாலும் அது கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அகத்தியரை தரிசிக்க செல்வோர் அம்மாநில அரசின் அனுமதியை பெறவேண்டியுள்ளது. கேரளாவிலிருந்து சுற்றுலா வருவோரும் நமது பகுதி வழியாகவே பொதிகைக்கு ஏற வேண்டியுள்ளது. இதனால் இதுவரை அனுமதி மறுக்கவில்லை. ஆனால், மங்கல தேவி கண்ணகியை வழிபட விடாமல் வழிமறிக்கும் நிலை வராமலிருக்க சரியாக அளந்து எல்லையை மறுநிர்ணயம் செய்தால் நல்லது. பழனி, கருவூர் என பல ஊர்கள் சித்தர்கள் சமாதியடைந்ததால் சிறப்பு பெறுகின்றன. ஆனால் பொதிகையோ அகத்தியர் வாழ்ந்ததால் பெருமையடைகிறது. அவர் சமாதியடையாமல் அரூபியாக காற்றில் உலாவுவதாகவும், தைப்பூசம் முதல் சித்ரா பவுர்ணமி வரை நிறைநிலா நள்ளிரவுகளில் தரிசனம் தருவதாகவும் ஆன்மீகவாதிகள் நம்புகின்றனர்.
பொதிகையின் தென்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் கல்லால் மூடப்பட்ட குகை ஒன்று உள்ளது. அகத்தியர் ஏடுகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பொதிகைக்கு 1 கிலோ மீட்டர் மேற்கே பாறையில் முகக்க குறையாத நீர் ஊற்று உள்ளது. அது அகத்தியர் தாகசாந்திக்காக அமைந்த ஊற்றாம். கோடையிலும் அந்த ஊற்று வற்றுவதில்லை. சங்குமுத்திரை பகுதியில் மூலிகைகளை அரைக்கும் பழங்கால ஆட்டு உரல்கள் பல இன்னும் காணப்படுகின்றன.
ஏக பொதிகையை அகத்திய கூடம் என்றே கேரளத்தினர் அடையாளம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் அகத்தியர் கதையும் அவ்வை கதையும் பலவித அனுமானங்களை ஏற்படுத்துகின்றன. மதுவுண்டு களித்த அதியமானின் தோழி, காதலை பாடிய இளமங்கை என இலக்கியத்தில் பல தோற்றம் தருகின்ற அவ்வையை கம்பூன்றிய மூதாட்டியாக கடற்கரையில் நிறுத்தியது போல், மொழியிலக்கணம் இயற்றிய புலவர், நிருதர்களையும் இராவணனையும் விரட்டிய ஈஸ்வரனின் தளபதி என புராணங்களில் பல அவதாரம் எடுத்த அகத்தியரை கமண்டலம் ஏந்திய குறுமுனியாகவே மலையில் நிறுத்தியுள்ளனர். இலக்கியங்களை ஆராய்ந்தால் பத்துக்கு மேற்பட்ட அவ்வைகளையும் அகத்தியர்களையும் காணமுடிகிறது. இருவரை பற்றியும் கட்டுக்கதைகளே அதிகம் புனையப்பட்டுள்ளன.
பொதிகை மலைத்தொடரில் தான் தமிழகம் எங்கும் கோயில் கொண்டுள்ள சாஸ்தாக்களுக்கெல்லாம் மூல சாஸ்தாவான சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. ஐயப்பன் பிறப்பும் வளர்ப்பும் இங்கு நிகழ்ந்ததாக கர்ண பரம்பரை கதை உள்ளது. கல்லில் தோன்றி கடலில் கலக்கும் வரையில் பொருநையில் நூற்றுக்கு மேற்பட்ட தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அவற்றுள் மலையடிவாரத்தில் உள்ள தாமிரபரணி, வேத தீர்த்தங்களும், மலை மீது உள்ள கல்யாண, பைரவதீர்த்தங்களும் முக்தியும் சித்தியும் அளிக்கும் என்பது பக்தர்கள் எண்ணம். இராவணன் மாவீரன், இசைவாணன் என்பதோடு சிறந்த சித்த மருத்துவனும் கூட. அவன் பொதிகை மலைக்கு பலமுறை வந்ததாக புராணங்கள் மூலம் தெரியவருகிறது.
புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்தி வரை பொதிகையில் உள்ளன. இது குறித்து வனத்துறை துணை இயக்குநர் பத்திரசாமி கூறுகையில்,‘ இந்த பிரபஞ்சத்தில் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வெடிப்பில் விழுந்த சிறு துண்டாகிய பூமி 500 கோடி வருடங்களுக்கு முன் குளிர்ச்சியடைந்தது பூமியானது. அதில் 300 கோடி வருடங்களுக்கு முன்பு உயிர்த்தோற்றம் உண்டானது என்கின்றனர். பூமி குளிர்ந்து ஒருவித வடிவத்துக்கு வந்து உயிர்கள் உருவான காலத்திலேயே பொதிகைகையும் தோன்றியிருக்கலாம். பொதிகை மலை 6000 சதுர கிமி பரப்பு கொண்டது. இதில் அகத்திய மலையின் உயரம் 1868 மீட்டர். நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தமிழ்நாட்டில் 76 உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் 121 உள்ளன. 27 வகை மீன், 9 வகை தவளைகள் பொதிகையில் மட்டுமே காணப்படுகின்றன. 177 ஊர்வனவற்றில் 157 வகைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டும் உள்ளன. 39 வகை இங்கு மட்டுமே வாழ்கின்றன. கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மூலவித்து இங்குள்ளது. மீன்வகை 165. இங்கோ 218 உள்ளன.‘ என்றார்.
மூலிகைகளின் மூல ஸ்தானம் பொதிகை மலை.‘ மூட்டு வலியை போக்கும் பளிங்கு காய், தாமிரத்தை பஸ்பமாக்கும் கல் தாமரை விஷம் முறிக்கும் கீரிக்கிழங்கு, சர்க்கரை நோயை போக்கும் பொன்கொரண்டி, என பல்வேறு மூலிகைகள் பொதிகையில் உள்ளன. மருத்துவ குணம் நிரம்பிய கள் சுரக்கும் ஆலம், சாலம், காந்தம், கூந்தல் உள்ளிட்ட 7 வகை பனைகள், 10 ஆண்டுகளில் காய்த்து, காயில் உள்ள விதையால் கர்ப்பப்பை புற்றை அகற்றும் கல்வாழை, பட்டையால் பாம்பிம் நஞ்சை இறக்கும் ஞாறவாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள் இங்கு வளர்கின்றன. உலகில் உள்ள பூக்கும் தாவரங்கள் 5640ல் 2654 வகை இங்கு உள்ளன. 600க்கு மேற்பட்ட மூலிகைகள் இங்கு மட்டுமே வளர்கின்றன.‘ என்கிறார் தமிழ் மருத்துவக்கழக தலைவர் மைக்கேல் செயராசு.
வார்னிஷ் தயாரிக்க உதவும் குலவு, விஷக்கடி வீரியத்தை போக்கும் புலவு, சிறுநீர்ப்பை கல்லடைப்பை நீக்கும் சர்க்கரை வேம்பு, தெம்பூட்டும் பாப்பிக்கொடி,தலைமுடியை கருகருவென வளர வைக்கும் கருநீலி, வசியம் செய்ய பயன் படும் மயிற்கண் போன்ற மயிற்சிறகை, சர்க்கரை வ் உதவும் கட்டுக்கொடி, கட்டியை உடைக்கவும், சத்ரு சம்ஹாரத்துக்கும் பயன்படுத்தும் செருப்படை போன்ற மூலிகைகள் இங்கு கொழித்துக்கிடப்பதாக விக்கிரமசிங்கபுரம் ஜெயராஜ் சுவாமிகள் கூறுகிறார்.
மானிடனின் முன்னோடிகளான குரங்கு, தேவாங்கு, மந்திகளோடு சிங்கவால் குரங்கும் இங்கு உண்டு. 895 சதுர கிலோ மீட்டரில் பரந்துள்ள களக்காடு&முண்டன்துறை வனவிலங்கு சரணாலயம் பறக்கும் அணில், மரநாய் முதல் யானை, புலி, கரடிகளுக்கு வாச ஸ்தலமாக இருக்கிறது. சிங்கங்களும் இங்கு இருந்திருக்கலாம் . சிங்கம்பட்டி, சிங்கம்புணரி என சிங்கப்பேர் கொண்ட சுற்றுப்புறக்கிராமங்களே இதற்கு சாட்சி. சிங்கம்பட்டி ஜமீனின் ராஜ முத்திரையும், இதே மலையின் தொடர்ச்சியான ஸ்ரீபாத மலை என்னும் ஆதம் மலையை கொண்ட இலங்கை அரசின் இலச்சினையும் சிங்கமாக இருப்பது அசைக்க முடியாத சான்று. மேலும், இலங்கையிலும் இங்கும் வாழும் மனித இனம் மட்டுமல்ல, உயிரினங்களும் ஒன்றே என்று உயிரியல் உறுதிப்படுத்துகிறது.
முன்னமே சொன்னது போல் அமைதியான தென்றலும், அமுதமான தமிழும், அருசுவையான மூலிகை நீரும் அருந்தி ஆரவாரமான நகர சூழலை விட்டு சொர்க்கானுபவம் பெற பொதிகை சுற்றுலா பொருத்தமாக தோன்றுகிறதல்லவா?

Wednesday, December 10, 2008
Subscribe to:
Posts (Atom)